Sunday, September 18, 2011

பான் கீ மூனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்படவுள்ளது?.

Sunday, September 18, 2011
ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பொதுச் செயலாளர் பான் கீ மூன், அடிப்படை இராஜதந்திர வரைறமுறைகளுக்கு புறம்பான வகையில் செயற்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக எழுத்து மூல முறைப்பாடு ஒன்றை முன்வைக்கவுள்ளது.

ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை எந்தவிதமான முன் அறிவித்தலும் இன்றி திடீரென ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பான் கீ மூன் மற்றும் நவநீதம் பிள்ளை ஆகியோருக்கு எதிர்ப்பை வெளியிடும் கடிதத்தை தயாரிக்கும் பொறுப்பு ஐக்கிய நாடுகள் அமைப்பின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பாலித கொஹணேவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கடுமையான எதிர்ப்பை வெளியிடுமாறு அறிவுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் நிபுணர் குழு அறிக்கை தொடர்பில் பதிலளிக்குமாறு இலங்கை அரசாங்கத்திடம் பல தடவைகள் கோரிய போதிலும் அதற்கு பதில் எதுவும் அளிக்கப்படவில்லை என பான் கீ மூனின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

நிபுணர் குழு அறிக்கைக்கு பதிலளிப்பதற்கு மாறாக உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு பொறிமுறையொன்றை அரசாங்கம் உருவாக்கியதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐக்கிய நாடுகள் அமைப்பின் 66ம் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் நோக்கில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று நியூயோர்க் பயணம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார்.

யுத்தக் குற்றச் செயல் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பில் சர்வதேச ரீதியாக எழுந்துள்ள அழுத்தங்களுக்கு இராஜதந்திர ரீதியில் பதிலளிக்கும் முனைப்புக்களில் ஜனாதிபதி தலைமையிலான குழு கூடுதல் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெளிநாட்டு இராஜதந்திரிகள், அரச தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஜனாதிபதி மற்றும் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

No comments:

Post a Comment