Monday, September 19, 2011

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வுத்திட்டம் கிடைக்குமா...?.(சாகரன்)

Monday, September 19, 2011
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று தம்மை தாமே கூறிக் கொள்ளும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் இன்று வரை தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு சம்மந்தமான வரைபுகள் ஏதும் இல்லை என்பது பலருக்கு தெரியாது. குறிப்பாக புலிகளின் தேசியம் பேசும் பலரும் இதனை அறிந்திருக்கவில்லை, அறியவும் விரும்பவில்லை. கடந்த பாராளுமன்றத் தேர்தல்கள் முடிந்த கையோடு நிபுணர் குழுவொன்றை அமைத்து தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுத் திட்ட வரைதலை மேற்கொள்ளப் போவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ‘பீற்றி’க் கொண்டனர். தமது 'மக்கள்' க்கான நலன்களை கவனிப்பதற்காக நேரங்களை செலவிடுவதில் மட்டும் இந்தியா என்றும் கொழும்பு என்றும் 'லங்காசிறீ’என்றும் அலைந்து திரிந்தனர். கூடவே புலம் பெயர் தேசத்து தங்கள் சாகாக்களிடம் இருந்து வரும் டாலர்களை உறுதிப்படுத்த அறிக்கைகளும்; ஐரோப்பிய, இலண்டன் பயணங்களை மட்டும் மேற்கொண்டனர். கூடவே மகிந்த அரசுடன் பின்கதவால் தமக்கான சலுகைகளை உறுதிப்படுத்திக் கொண்டனர்.

யூ.என்.பி அரசியல் தீர்வு வரைதலை பற்றி எப்போதும் கவலைப்பட்டது கிடையாது. ஆளும் கட்சியாக இருக்கையில் தமிழர் தரப்பு ஓற்றுமையை குலைக்க தமிழ் மக்கள் தரப்பில் ஒரு சக்தியை இனம் கண்டு அவர்களை கொண்டே மற்றவர்களை பலவீனப்படுத்தி மற்றவர்களை இல்லாமல் செய்வர். அந்த தந்திரோபாய(ண)ம் டட்லி காலத்திலிருந்து ஜேஆர், பிரேமதாசா காலத்தினூடு பயணித்து ரணில் வரையும் நீண்ட வரலாறு உண்டு. தமிழ் காங்கிரசை 'இல்லாமல்' செய்ய தமிழரசுக் கட்சியை பாவித்ததையும், தமிழர் விடுதலைக் கூட்டணியை பலவீனப்படுத்த ஆயுதம் ஏந்திய இயங்கங்களை பணன்படுத்தியதும், பின்பு புலிகளைக் கொண்டு ஏனைய இயக்கங்களை 'இல்லாமல்' செய்தலையும், இறுதியாக கருணாவை பிரித்து புலிகளை இல்லாமல் செய்ய அடித்தளம் இட்டது என்று சொல்லிக் கொண்டே போகலாம். யூஎன்பி இதனைச் 'சாதிப்பது' இற்கு ஏற்ற சூழல்கள் அவ் அவ் காலகட்டத்தில் தமிழர் தரப்பிலும் இருந்தன என்பதுவும் இங்கு கவனிக்கப்பட வேண்டியதொன்றாகும்.

யூ.என்.பி எதிர் கட்சியாக இருக்கையில் அரசியல் தீர்வை கொண்டு வாருங்கள் என்று கத்துவதை தமிழ் மக்களின் நண்பன் என்று காட்டுவதற்காக மட்டும் செய்யும். ஆளும் கட்சி அரசியல் தீர்வுத் திட்டத்தை? கொண்டு வரும் போது உராய்வு விசைபோல் எதிர் திசையில் மட்டும் செயற்படுவது இவர்களின் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சம்மந்தமான அரசியல் நிலைப்பாடாகும். தீர்வுத் திட்டங்களை எதிர்த்து பாதயாத்திரை செல்வது (பண்டா செல்வா ஒப்பந்தத்ததை எதிர்த்து ஜே.ஆர். ஜெயவர்தனா கண்டி யாத்திரை செய்தது.) குறும் தேசியவாதிகளுடன் சேர்ந்து குழப்புவது (இலங்கை - இந்தி ஒப்பந்த செயற்பாட்டை பிரேமதாஸ புலிகளுடன் சேர்ந்து செயற்பாடு இல்லாமல் 'சாகடிக்க' செய்தது.) அல்லது பாராளுமன்றத்தில் அரசியல் தீர்வுத் திட்டத்தை கொழுத்துவது (சந்திரிகா அம்மையாரின் அரசியல் தீர்வுத் திட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் யூஎன்பி கைகோர்த்து கொழுத்தி இல்லாமல் செய்தது.) போன்ற வரலாற்றை மட்டுமே தமக்குள் கொண்டிருக்கின்றனர். இதனையே வருங்காலத்திலும் தொடருவர். இவர்களின் இவ்வாறான் செயற்பாட்டிற்கான ஆலோசனை, ஆதரவு, ஒத்துழைப்பு எல்லாம் மேற்கத்திய நண்பர்கள் தொடர்ந்தும் வழங்கிக் கொண்டு இருப்பர். இதற்கு புலம் பெயர் தேசத்து 'நாடு கடந்தவர்கள்' உம் அவர்களின் வழித் தோன்றல்களும் மக்களை எமாற் றி தமது பிழைப்புக்களைத் தொடர உதவிகள் செய்து கொண்டு இருப்பர்.

இதைப் போலவே ஜேவிபி யிடமும் எந்த அரசியல் தீர்வுத் திட்ட வரைதலும் இல்லை. இவர்கள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுக்கு செய்தது எல்லாம் இணைந்திருந்த வடக்கு கிழக்கு மாணசபையை 'சட்டத்தை' பாவித்து பிரித்து வைத்ததுதான். இவர்களின் செயற்பாட்டிற்கும் யூ.என்.பியின் செயற்பாடுகளுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் இருக்கவில்லை. இனிமேலும் இருக்கப் போவதும் இல்லை. தமிழ் மக்களுக்கு என்று பிரத்தியேக பிரச்சனைகள் இல்லை என்பதே இவர்களின் தமிழ் மக்கள் சம்மந்தமான அரசியல் நிலைப்பாடு ஆகும். பலவீனமான நிலையிலிருந்தாலும் இலங்கையின் இடதுசாரிகள் தொடர்ந்தும் இலங்கைவாழ் சகல மக்களின் சம, சக வாழ்விற்கு தொடர்ந்தும் தம்மால் இயன்றவரை 'போராடி' க் கொண்டு இருக்கின்றனர் என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.

சிறீலங்கா சுதந்திரக்கட்சி (முழுமையற்ற) அரசியல் தீர்வுத் திட்டங்களை தன்னக்கத்தே கொண்டிருப்பினும் இதுவரை தைரியத்துடன் முன்னோக்கி சென்று அமுல்படுத் தவில்லை. இது பண்டாரநாயக்கா காலத்திலிருந்து சந்திரிகா காலத்தினூடாக பயணித்து இன்று மகிந்த சகோதரைய காலத்தில் வந்து நிற்கின்றது. எவ்வளவு குறைவான தீர்வை எவ்வளவுக்கு காலம் தாழ்த்தி கொடுத்தல் என்ற பௌத்த, சிங்கள தேசியவாத இரும்புத்திரை ஊடான பார்வை யை சிறீலங்கா சுதந்திரக்கட்சியும் மீற விரும்பவில்லை. இரும்புத்திரை ஊடான பார்வையை விலக்கி சாதனைகள் படைப்பார் மகிந்த சகோதரைய என்ற நம்பிக்கை தமிழ் மக்கள் இன்று இழந்து வருகின்றனர் என்பதே யதார்த்த நிலை.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை தன்னகத்தே கொண்டுள்ள பொது சன ஐக்கிய முன்னணி யுத்தம் முடிவுற்று இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவும் அரசியல் தீர்வுத் திட்டத்திற்காக அடிக்கல்லைக் கூட நாட்டவில்லை. மாறாக சர்வ கட்சி மகாநாடு, நல்லிணக்க ஆணைக்குழு, தமிழ் தேசிக் கூட்டமைப்புடன் மட்டும் பேசுதல், பாராளுமன்றக் குழு அமைத்து செயற்படுத்தல் என்ற 'புலுடா' க்களை மட்டும் விட்டு வருகின்றது என்றே தமிழ் பேசும் மக்கள் நம்பவேண்டியுள்ளது. தம்மிடம் உள்ள அரசியல் தீர்வுத் திட்டத்தை முன்வைத்து தமிழ் மக்கள் மத்தியில் உள்ள சகல கட்சிகளையும் அழைத்து பேசுதலில் ஆரம்பித்து கால வரையறைக்குள் பேசி முடிதல் என்ற செயற்பாட்டை இலங்கை அரசு மேற் கொள்ள வேண்டும். இதற்கு இந்தியா போன்ற 'நட்பு' நாடுகளின் உதவிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கருணா அம்மானைக் கொண்டு தமிழ் பகுதிகளுக்கு பொலிஸ் அதிகாரம் தேவையில்லை, தமிழ் மக்களுக்கு பிரத்தியேகமான பிரச்சனைகள் இல்லை என்றும் அறிக்கைகள் விடுவதை தவிர்த்திருக்க வேண்டும். கூடவே தமது கட்சிக்குள் இருக்கும் பேரினவாத சக்திகளைக் கொண்டும், தமது கூட்டணிக் கட்சிகளைக் கொண்டு இனவாதம் பேசுவதையும் தவிர்த்திருக்க வேண்டும். மேலும் சீனாவை காட்டி இந்திவை பணியவைக்கும் 'தந்திரோபாய' அரசியலையும் தவிர்த்திருக்க வேண்டும். இவ்வாறு செயற்பட்டிருந்தால் அரசியல் தீர்வுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டல் என்ன கட்டடமே இன்று எழுப்பி இருக்க வாய்ப்புக்கள் ஏற்பட்டிருக்கும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இனிமேலாவது தமிழ் பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டதை ஏற்படுத்துவதில் சரியான திசைவழியில் மகிந்த சகோதரைய பயணிக்க வேண்டும் என்பதே எமது எமது நியாயாதிக்க எதிர்பார்ப்பு ஆகும்.

இப்படிச் செயற்பட்டால் உள்ளூர்ராட்சி தேர்தலில் மட்டும் என்ன பாராளுமன்னத் தேர்தலிலும் தமிழ் பிரதேசங்கள் எங்கும் இன்னும் பல மேலதிக ஆசனங்களை பொது சன ஐக்கிய முன்னணியால் கைப்பற்ற முடியும். அபிவிருத்தியென்று தமிழ் அமைச்சரும், பசில் ராஜபக்ஷவும் தமிழ் பிரதேசம் எங்கும் 'டோரா' போட்டு சாதிக்க முடியாததை இனிவரும் காலங்களில் சாதிக்க முடியும். இதனை மகிந்த சகோதரையா உணருவாரா? உணர வேண்டும் என்பதே எம் அவா. அன்றேல் சனல் 4 என்றும், போர்க்குற்றம் என்றும் புலம் பெயர் தேசத்து புலிகளின் சொந்தக்காரர்கள் இன்னும் மேற்குலகின் ஆதவுடன் சீனாவையும் காரணம் காட்டி தமது பிழைப்பையும் நடாத்திக் கொண்டு இருப்பர். பாவம் இலங்கையில் இருக்கும் தமிழ் மக்கள். மகிந்த சகோதரையாவிற்கு இது மிரட்டல் அல்ல வேண்டுகோளே. தமிழ் மக்களின் விடிவிற்காக, நன்மைக்காக கடந்த 30 வருடங்களாக போராடி வரும் நாங்கள் இதனையும் செய்யத் தயாராக இருக்கின்றோம்.

(Saakaran) (புரட்டாசி 18, 2011 )
(sooddram.com)

No comments:

Post a Comment